பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டியவை !!



பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டியவை !!

• வேலைக்குச் செல்லும் பெண்கள், கால்களில் சக்கரங்களைக் கட்டிக்கொண்டு பறக்கிறார்கள். வீட்டிலிருக்கும் பெண்களுக்கு குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனிப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கும் பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியம் குறித்து பெரிதாக கவலைப்படுவதில்லை என்பது வருத்தமான ஒன்றுதான். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்களானாலும் சரி, வீட்டை நிர்வகிக்கும் பெண்களானாலும் சரி, கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆரோக்கிய விதிகளைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

      கலோரி :
      
    • ஒருவருக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 2000 கலோரிகள் தேவை. இது, ஒவ்வொருவரின் பி.எம்.ஐ அளவைப்பொருத்து மாறுபடும். 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு, ஒரு நாளைக்கு 1600 முதல் 1800 கலோரிகள் தேவை. உணவு ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று, பி.எம்.ஐ அளவைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

      உடற்பயிற்சி :

    • வீட்டு வேலை, அலுவலக வேலை என பெண்கள் முழு நேரமும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் பெண்கள் கட்டாயம் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டும். வீட்டிலேயே எளிமையாகச் செய்யக்கூடிய பயிற்சிகளைக் கற்றுக்கொண்டு செய்யலாம். உடற்பயிற்சிகள் செய்வதால் உடல் எடை கூடுதல், இதய நோய்கள், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.

      உடல் பரிசோதனை :

    • ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் பெண்கள் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்து கொள்வது முக்கியம். குறிப்பாக மார்பகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மார்பகங்களில் வலி, வீக்கம், கட்டிகள், அரிப்பு, வேறுவிதமான மாற்றங்கள் ஏதாவது இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி காரணத்தைக் கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

      அதிகநேரம் உட்கார வேண்டாம் :

    • பெண்கள் அதிக நேரம் உட்காருவதை தவிர்ப்பது நல்லது. அதிக நேரம் உட்கார்ந்தே இருந்தால் சர்க்கரைநோய், இதயநோய்கள் போன்ற மிக விபரீதமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் குறிப்பிட்ட இடைவெளியில் எழுந்து நடக்கலாம்.
      
      எலும்புகள் :

    • ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் பெண்களுக்கு எலும்பு தேய்மானமாக வாய்ப்புண்டு. இதன் காரணமாக முதுகுவலி, இடுப்பு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். உணவில் கீரைகளை அதிகமாக சேர்த்துக்கொள்வதாலும் உடற்பயிற்சிகள் செய்வதாலும் எலும்புகள் வலுவாகும்.

      தண்ணீர் :

    • காலை எழுந்தவுடன் முதல் வேலையாக தண்ணீர் குடிக்க வேண்டும். உடலின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்து, உடலும், மூளையும் புத்துணர்ச்சியடையச் செய்ய இது உதவும். தாகம் இருந்தாலோ, இல்லாவிட்டாலோ குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடித்துக்கொண்டு இருந்தால் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும்.

Comments