கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

Monday, 3 February 2020

கர்ப்ப காலங்களில் எடுக்கப்படும் ஸ்கேன் பரிசோதனை எவ்வளவு முக்கியம் !

கர்ப்ப காலங்களில் எடுக்கப்படும் ஸ்கேன் பரிசோதனை எவ்வளவு முக்கியம் என்பதைக் கூறும் பதிவு

நான் ஆரம்ப சுகாதார நிலைய பொறுப்பு மருத்துவராக பணியாற்றிய போது நிகழ்ந்த நிகழ்வு

நான் எனது அன்றாடப்பணிகளுடன் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்ய மற்றும் கருவுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு வரும் குறைபாடுகளை கண்டறியும் ஸ்கேன் பயிற்ச்சியும் பெற்றிருந்தமையால் வாரம் முப்பது கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்வேன். இதில் கர்ப்பத்தின் பல்வேறு மாதங்களில் இருக்கும் கர்ப்பிணிகளும் அடங்குவர்.


அன்று காலை மருத்துவமனை சென்ற சிறிது நிமிடத்தில்
பிரசவ வலியுடன் ஒரு கர்ப்பிணித் தாய் வந்திருந்தார்.

கர்ப்ப காலத்தில் இதுவரை இரண்டு முறை தான் எங்களை சந்திக்க வந்திருக்கிறார்.

மூன்றாவது பிரசவம் .
குறை மாதத்தில் (34 வாரம்) வலி வந்து விட்டது. 36 வாரங்களை கடந்தால் தான் அது நிறைமாதமாகக் கொள்ளப்படும்.

அவரது ரத்த அழுத்தமும் சிறிது உயர்வாகிக்கொண்டே போனது. இதை pre eclampsia என்போம். எந்நேரம் வேண்டுமானாலும் கர்ப்பத்தினால் ஏற்படும் வலிப்பு நோயாக (Eclampsia) மாற வாய்ப்புண்டு. அது தாய் சேய் இரு உயிர்களுக்கும் பாதகமானது.

பெண் மருத்துவர் யோனிப்பரிசோதனை(Per vaginal examination) செய்தார்.
கர்ப்பபை வாய் திறக்கவில்லை.

அனைத்து முதலுதவி நடவடிக்கைகளும் செய்யப்பட்டு, மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பிவிடுவது என்று முடிவு செய்யப்பட்டு 108 அவசர ஊர்தி அழைக்கப்பட்டது

சரி இடைப்பட்ட நேரத்தில் ஒரு ஸ்கேன் எடுப்போம் என்று நான் அவசரமாக ஸ்கேன் எடுத்தேன்.

அதில் குழந்தைக்கு மூளையினுள் கபால நீர் ( cerebrospinal fluid) செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டு கபால நீர் தேங்கி தலை நன்றாக வீங்கியிருந்ததை கண்டறிந்தேன். இதை hydrocephalus / bilateral ventriculomegaly. என்போம்.

🟢இது இந்தியாவை பொறுத்த மட்டில் பிறக்கும் ஆயிரம் சிசுக்களில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்கு வரும் பிறவிக்குறைபாடாகும் 🟢

மருத்துவக்கல்லூரியிலும் இதை உறுதி செய்துவிட்டு, தாயின் உயிரைக்காக்க உடனே பிரசவத்தை முடிவுக்கு கொண்டு வரும் முடிவை துரிதமாக எடுத்து ஜனனக்குழாய் வழி குழந்தை ஈன்றெடுக்கும்படி மருத்துவம் செய்தனர்.

அந்த தாய், குழந்தையை பிரசவித்த சிறிது நேரத்தில் குழந்தை இறந்துவிட்டது என்ற செய்தி அந்த நாளின் பிற்பகுதியில் என்னை அடைந்தது

குழந்தைக்காக வேதனை அடைந்தாலும், தாய்க்கு ஒன்றும் ஆக வில்லை என்று பெருமூச்சும் விட்டேன்.

என் மனதில் தோன்றியது

இந்த பெண்மணி இருபது வாரங்களுக்கு முன்பே வந்திருந்தால் அப்போதே கண்டுபிடித்திருந்தால்
இத்தனை கஷ்டங்கள் தேவைப்பட்டிருக்காது

காரணம் குழந்தை கர்ப்பபைக்குள் இருக்கும் 20 வாரங்களுக்குள் எடுக்கப்படும் TARGET scan அல்லது Anomaly scan எனும் குழந்தையின் உறுப்புகளில் உள்ள குறைபாடு / வளர்ச்சிக்குறைபாடு போன்றவற்றை கண்டறிய முடியும்.

20 வாரங்ளுக்குள் இத்தகைய பெரிய உடல் அங்க குறைபாடுகள் கண்டறியப்பட்டால் தாய்க்கு குழந்தையை அபார்சன் செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும் .

இதை "Termination of Pregnancy" என்று அழைக்கிறோம்.

இதனால் மேலும் இருபது வாரங்கள் தாய் பிரச்சனை கொண்டுள்ள கருவை சுமக்கும் பாரத்தில் இருந்தும் , அதனால் உண்டாகும் பிரச்சனைகளில் இருந்தும் விடுபடமுடியும்.

பல சமயம் தாயின் உயிரும் காக்கப்படும்

அல்லது

குழந்தைக்கு பிறந்த உடனே அறுவை சிகிச்சை செய்யும் வசதிகள் உள்ள பெரிய மருத்துவமனைக்கு முன்னரே அனுப்பி குழந்தை பிறந்தவுடன் அதற்கான அறுவை சிகிச்சையை குழந்தைகள் சிறப்பு அறுவை சிகிச்சை (pediatric surgeon / pediatric neuro surgeon) நிபுணர் செய்வதால் இந்த நோயை கட்டுக்குள் வைக்க இயலும்.

கபாலத்தில் இருந்து ஒரு செயற்கை குழாய் மூலம் அதிகமான கபால நீரை வயிற்றுப்பகுதிக்கு கொண்டு விடும் கால்வாயை ஏற்படுத்த முடியும். இது கபால நீருக்கு வடிகாலாக அமையும். இதை Ventriculo peritoneal shunt என்று அழைக்கிறோம்

மேற்சொன்ன இரண்டு முடிவுகள் எடுப்பதும்..எத்தனை சீக்கிரம் ஸ்கேன் செய்து இந்த பிரச்சனையை கண்டறிகிறோம்? என்பதைப்பொறுத்து இருக்கிறது.

கர்ப்ப காலத்தில் ஸ்கேன் செய்தால் குழந்தை மூளை வளர்ச்சி பாதிக்கப்படும் என்று பரப்பப்படும் செய்தியில் துளி கூட உண்மையில்லை

தமிழக அரசு ஒவ்வொரு கர்ப்பிணியும் தங்கள் பேறு காலத்தில் குறைந்தபட்சம் மூன்று ஸ்கேன்களாவது செய்திருக்க வேண்டும் என்று மேற்கோள் காட்டுகிறது

கர்ப்பிணிகள் அனைவரும் உங்கள் மருத்துவர் அறிவுறுத்தும் கர்ப்ப கால ஸ்கேன்களை கட்டாயம் செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

No comments:

Post a Comment