மார்பகத்தை இழக்காமலிருக்க.... மார்பக புற்றுநோய்


மார்பகத்தை இழக்காமலிருக்க.... மார்பக புற்றுநோய்

இப் பெண் போல மார்பகத்தை இழக்காமலிருக்க..


இந்தப் பெண் போல பாதிப்புறுவதற்கு எந்தப் பெண்ணிற்குத்தான் விருப்பம்
இருக்க முடியும். பெண்மையின் அடையாளமாக அவளது பெருமையின் சின்னமாக,
சுயகௌரவத்;தைப் பேணுவதாக இருப்பது மார்பகங்கள். இதை இழப்பது பெண்களால்
சகிக்கக் கூடிய விடயம் அல்ல.


மற்றவர்களை மோகிக்க வைத்த அதே உறுப்பு அவளைச் சாகடிக்கவும் கூடும்
என்பதுதான் சோகமான மறுபக்கம்.

புற்றுநோய் என்றால் புதைகுழிக்கு செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்ற
எண்ணமே இன்றும் பலரிடையே நிலவுகிறது.

ஆனால் இன்று மார்புப் புற்றுநோயானது குணமாக்கக் கூடிய நோய் என்பது
பலருக்குத் தெரிவதில்லை. அதுவும் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிட்டால்
வந்த சுவடின்றி முற்றாக மாற்றக் கூடியதாகும்.

மார்பகப் புற்று நோயானது பால் சுரக்கும் கலங்களில் அல்லது சுரந்த பாலை
முலைக்குக் கடத்தும் குழாய் (கான்) களில் தோன்றுவதாகும்.

யாருக்கு?

ஆண்களுக்குக் கூட மார்புப் புற்றுநோய் வரலாம். பெண்களே பெருவாரியாகப்
பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் எத்தகையவர்களுக்கு இது வருவதற்கான
வாய்ப்பு அதிகம்?

   1. தாய், சகோதரி என நெருங்கிய குடும்ப உறவினர்களிடையே காணப்பட்டால்
வாய்ப்பு அதிகமாகும்.
   2. மகப் பேறு இல்லாத பெண்களுக்கு.
   3. காலம் கடந்து முதுவயதில் தாய்மைப் பேறு அடைந்தவர்களுக்கு
ஏனையவர்களi விட அதிக சாத்தியம் உள்ளது.
   4. மாதவிடாய் நின்ற பின்னர் திடீரென அதிகளவு எடை கூறியவர்கள்.
   5.   பெண் ஹோர்மோன் ஆன ஈஜ்ரோஜனைத் தூண்டுவதற்கான சிகிச்சைகளை
நீண்டகாலம் செய்தவர்களுக்கு.
   6. மிகக் குறைந்தளவு வயதிலேயே பூப்படைந்தவர்களுக்கு.
   7. மிகப் பிந்திய வயதிவேயே மாதவிடாய் முற்றாக நின்றவர்களுக்கு.
   8.   ஈஜ்ரோஜன் அடங்கிய கருத்தடை மாத்திரைகளை மருத்துவ ஆலாசனை இன்றி
நீண்ட காலம் உபயோகித்தவர்களுக்கு


இவ்வாறான வாய்ப்புள்ளவர்களுக்கு மாத்திரமின்றி ஏனையவர்களுக்கும் அது
வருவதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

எனவே ஒவ்வொருவரும் தமது மார்பகங்களில் அக்கறை செலுத்துவது அவசியமாகும்.
அதன் முதற்படி அதனை அக்கறையுடன் கவனிப்பதுதான்.


இதன் மூலம் ஆரம்ப அறிகுறிகளை ஒருவரால் கண்டறிய முடியும்.

அறிகுறிகள்

    * முக்கியமானது மார்பில் தோன்றும் வீக்கங்களும் கட்டிகளுமாகும். வலி
இருக்கிறதோ இல்லையோ எத்தகைய மாற்றங்களும் கவனத்தில் எடுக்கப்பட
வேண்டியவையே.

மார்புக் கச்சையின் அளவும் ஆரோக்கியமும்

    * சாதாரண அவதானத்தில் அல்லது கண்ணாடி முன் நின்று பார்க்கும்போது
மார்பக அளவுகளில் மாற்றம் தென்பட்டால் அசட்டை செய்ய வேண்டாம். சிலருக்கு
இயல்பிலேயே ஒரு மார்பு மற்றதைவிடப் பெரிதாக இருக்கும். இது பயப்பட
வேண்டியதில்லை. ஆனால் அந்ந அளவுகளில் புதிய மாற்றம் ஏற்பட்டால் கவனத்தில்
எடுப்பது அவசியம்.



    * மார்பின் மேற்பரப்பில் ஏதாவது பள்ளம் அல்லது உட்குழிவு ஏற்பட்டால்.
    * மார்பக தோலின் மிருதுத் தன்மையில் மாற்றம் ஏற்பட்டால், முக்கியமாக
தோடம்பழத்தில் உள்ளது போல சிறு திட்டிகளும் பள்ளங்களுமாக மாற்றம்
ஏற்பட்டால்.
    * முலைக்காம்பின் தோற்றத்தில் மாற்றம். அல்லது துருத்திக்
கொண்டிருந்த முலைக்காம்பு உள்வாங்கப்பட்டால்.



    * முலைக் காம்பின் ஊடாகத் திரவம் வெளியேறினால்.
    * மார்பகத்தில் வலி ஏற்பட்டால். சில பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில்
வழமையாக வலி ஏற்படுவதுண்டு. இதைத் தவிர ஏதாவது வலி ஏற்பட்டால்
மருத்துவரைக் காண வேண்டும்.


மேற்கண்ட அறிகுறிகள் ஏதாவது தெரிந்தால் உடனடியாக உங்கள் குடும்ப
மருத்துவரை அல்லது உங்கள் பகுதியில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்

பரிசோதனைகள்

மார்பகத்தில் கட்டியிருந்தால் அல்லது இருக்கிறதா எனச் சந்தேகம் எழுந்தால்
பரிசோதனைகள் மூலமே விடை காண முடியும்.

1.    மமோகிறபி அல்லது மார்பக கதிர்ப்படம் என்பது மிக முக்கியமானதாகும்.
ஐககளினால் தடவிக் கண்டு பிடிக்க முடியாத சிறிய கட்டிகளைக் கூட மிக ஆரம்ப
நிலையிலேயே கண்டறிய உதவுகிறது. வழமையன கதிர்படங்கள் (X Ray) போலல்லாது
மிகக் குறைந்தளவு கதிர்வீச்சு மட்டுமே பயன்படுத்தப்படுவதால் ஆபதற்றது.
2.    ஸ்கான் (Ultra Sound Scan) பிரிசோதனை. குட்டியிருக்கிறதா எனச்
சந்தேகம் இருந்தால் அதனைக் கண்டறிய மிக உதவியானது. அதிலும் முக்கியமாக
இளம் பெண்களில் கட்டி மிகத் தளிவாகத் தெரியும்.
3.    சிறிய ஊசி மூலம் கட்டியிலுள்ள சிறியளவு திசுக்களைப் உறிஞ்சி
எடுத்து பெற்று இழையவியல் பரிசோதனை செய்தல். கட்டியானது ஆபத்தற்ற சாதாரண
கட்டியா புற்றுநோயா போன்ற விபரங்களை அறிய இது அவசியமாகும்.


நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு வருவோம். இப் பெண் போல மார்பகத்தை
இழக்காமலிருக்க நீங்கள் செய்ய வேண்டியவை என்ன?
1.    ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உதாரணமாக மாதமொருமுறை உங்கள்
மார்பகங்களை கட்டியிருக்கிறதா என்பதையிட்டு சுயபரிசோதனை செய்வது
அவசியமாகும்.. இதை எப்பொழுது செய்வது எவ்வாறு செய்வது என்பது பற்றி
மற்றொரு கட்டுரையில் பார்க்கலாம்.
2.    கட்டி சிறியதாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரைக் காணுங்கள்.
சுயபரிசோதனையின் போது மேலே சொன்ன அறிகுறிகளில் ஏதாவது இருந்தாலும்
அவ்வாறு அணுகவும்.
3.    மருத்துவரின் ஆலோசனையுடன் மமோகிறபி (Mamography) எனப்படும் மார்பக
கதிர்ப்படம் எடுத்தல். கட்டி வந்த பின் அல்ல. வெளிப்படையாகத் தெரிய
முன்னரே ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது அவசியமாகும்.

மமோகிறாம்

இது ஒரு முக்கிய பரிசோதனை. கட்டி தென்பட்ட பின் செய்வது மாத்திரமல்ல,
இந்நோய் வர வாய்புள்ள பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்காக அவசியம் செய்ய
வேண்டிய பரிசோதனை ஆகும்.


இந் நோய் வருவதற்கான சாத்தியம் அதிகமுள்ள பெண்களுக்கு 35 வயதிற்கு
பின்னர் வருடாவருடம் செய்வது அவசியம்.

50வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை செய்வது
அவசியம். ஆயினும் இதற்கான வசதி நாடு பூராவும் இல்லை என்பது உண்மையே.
ஆயினும் கொழும்பில் தனியார் துறையினரால் பல இடங்களில் செய்யப்படுகிறது
என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவம்

இன்றைய நிலையில் மார்பகப் புற்று நோய் வந்தால் கூட முதலில் கூறியது போல
மார்பகத்தை முற்றாக அகற்றும் சிகிச்சைகள் செய்யப்படுவதில்லை.
சத்திரசிகிச்சை, கதிர் சிகிச்சை, மற்றும் ஊசி மருந்துகள் மூலம்
முழமையாகக் குணமாக்கலாம்.

ஆபத்தான நோயெனப் பயந்து மறைக்காது, உடனடியாக மருத்துவரை அணுகுவதன் மூலம்
பூரண குணம் பெற்று ஏனைய பெண்களைப் போல வாழலாம் என்பது உறுதி.

புற்றுநோயல்லாத கொழுப்புக் கட்டிகள் (Lipoma)

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Comments