- Get link
- X
- Other Apps
உங்கள் தேவைகளில் கவனம் செலுத்துங்கள் குறுகிய இடத்தில் வசிக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் உங்கள் தேவைகள் என்ன என்பதில் கவனம் செலுத்துவதும், தேவையற்றதை நீக்குவதுமே.
ஆசைக்காக பயனற்றதை எல்லாம் வாங்கி அடுக்குவதை விட, உங்கள் வீட்டுக்கு எது அவசியமாகத் தேவையோ அதை வாங்குவதற்கு மட்டும் செலவழியுங்கள். அளவைக் குறைப்பதே இட நிர்வாகத்தின் அடிப்படை அம்சம். மேற்கு பாந்த்ராவில் வசிக்கும் ஸ்டெல்லா பால் கூறும் போது, "ஒரு ஸ்டுடியோ அபார்ட்மென்ட்டில் நாங்கள் வசிக்க நேர்ந்ததால் ஏராளமான பொருட்களை நாங்கள் ஒதுக்கிவிட்டு, எங்களுக்கு மிக அவசியமானவற்றை மட்டும் வைத்துக் கொண்டோம்.
எது அவசியமான தேவை என்பதை முடிவு செய்து அவற்றை வாங்கி விட்டால் உங்கள் தேவைக்கேற்ற படி உங்கள் இருப்பிடத்தின் அமைப்பை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்" என்கிறார்.
வித்தியாசமாக சிந்தியுங்கள் தரைப் பரப்பு குறைந்த அளவே இருக்கிறதா, கவலை வேண்டாம், உங்கள் படைப்பாற்றலுக்கு வேலை கொடுங்கள், இருப்பிடத்தின் உயரத்தைப் பயன்படுத்துங்கள்! இன்டீரியர் டெகரேட்டர் சைமன் செரியன் சொல்வதைக் கேளுங்கள்: "குடியிருக்கும் வீடுகளில் இப்பொழுது சுவரோடு இணைந்து தேவைப்படும் போது விரித்துக் கொள்ளும் பங்க் படுக்கைகளைப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. உயர இடத்தைப் பயன்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். தரைக்கும் கூரைக்கும் இடைப்பட்ட இடத்தை முழுமையாகப் பயன்படுத்துவதே இதில் முக்கியம். உங்கள் சமையலறையில் உயரமான பேக்கரி அலமாரி அல்லது பாட்டில் ஹோல்டரைப் பயன்படுத்தலாம்."
உள்ளமைந்த அலமாரிகள் சேமிப்பு இடத்தை அதிகரிக்கும் இன்னொரு தீர்வு இது. ஒரு சிறிய சீரமைப்பு உங்களுக்குக் கூடுதல் இடத்தை அளிக்கும். உள்ளமைந்த புத்தக அலமாரிகள், ஆடை அடுக்குகள், சுவர் கப்போர்டுகள் போன்றவை உங்கள் வாழ்க்கையை எளிமையும் வசதியும் நிறைந்ததாக மாற்றிவிடும். உங்களிடம் ஒரு செல்லப் பிராணி இருந்தால் அதற்கும் கூட ஒரு மூலையில் வசதியான இடம் உருவாக்க முடியும். உங்கள் புத்தகங்கள், மியூசிக் ஆல்பங்கள், பத்திரிகைகள் போன்றவற்றை படுக்கைக்குக் கீழே மறைத்து வைக்கவோ அல்லது பாதி விலைக்கு விற்கவோ செய்யாமல் அழகாக அடுக்கி வைக்க முடியும்.
குப்பையைக் குப்பையில் போடுங்கள் சிறிய வசிப்பிடங்களில் நிம்மதியாக வாழ்வதற்கு முக்கியமான வழி தேவையற்றதைத் தூக்கி எறிவது தான். இது உண்மை தான் என்கிறார் தனது இரு மகள்களுடன் மும்பையின் புறநகர்ப் பகுதியில் வசித்து வரும் ஷில்பி வர்மா. "நாம் வீட்டில் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து வரும் தேவையற்ற பொருட்களின் அளவை யோசித்துப் பார்த்தால் ஆச்சரியம் ஏற்படும். நாம் இதை எப்போதும் உணர்வதே இல்லை. தேவையற்றதை எடுத்துப் போட்டாலே நமக்கு நிறைய இடமும் கிடைக்கும், நிம்மதியாகவும் லேசாகவும் உணர முடியும்" என்கிறார் அவர்.
கலைப் பொருட்கள் கலையும் வடிவமைப்பும் சேர்ந்து உங்கள் சிறிய வீட்டுக்கு ஆச்சரியமான தோற்றத்தைத் தரும். சில தனிப்பட்ட வடிவமைப்புகளைச் செய்து உங்கள் உணர்வுக்கேற்ற விதத்தில் உங்கள் அறையை மாற்றி அமையுங்கள். ஓவியம் மற்றும் கலைகள் எந்த வடிவத்தில் இருந்தாலும் அது அழகைத் தந்து மகிழ்விக்கும். பழமை, புதுமை, கைவினை மற்றும் தெருவில் விற்பவை என்று கலைகள் எங்கும் நிறைந்திருக்கின்றன. அவற்றைக் கொண்டு உங்கள் வெற்றுச் சுவர்களையும், மூலைகளையும் அலங்கரியுங்கள். சோர்வு தரும் வீட்டைப் புத்துணர்வு பொங்கும் பிரகாசமான இடமாக மாற்றுங்கள்.
சிறிய இடத்தைப் பிரகாசமாக மாற்றும் வழிகள் * வண்ணமயமான மற்றும் நவீனமான வால்பேப்பர்களைக் கொண்டு சுவர்களை அலங்கரியுங்கள். * உங்கள் பொருட்களைச் சுவரில் தொங்க விடுங்கள். உதாரணமாக, உங்கள் அழகான நகைகளை (கவரிங் தான்...) சுவரில் தொங்க விட்டு வீட்டை அழகுப்படுத்துங்கள். * பொருட்களைப் பிரித்து வைத்துப் பயன்படுத்த சிறு பெட்டிகள் மற்றும் கூடைகளைப் பயன்படுத்துங்கள். இதன் மூலம் அந்தந்தப் பொருட்களை அதனதன் இடத்தில் வைக்கவும் வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும் முடியும். ரிப்பன் அல்லது லேஸ் கொண்ட சிறு கூடைகளை முயற்சித்துப் பாருங்கள்.
எதைத் தவிர்க்க வேண்டும்? * அடர்த்தியான டிசைன்கள் கொண்ட தலையணை உறைகள் மற்றும் திரைச்சீலைகள் வேண்டாம். அவை உங்கள் வீட்டை இன்னும் நெரிசலாகக் காட்டும். * அளவுக்கு அதிகமான ஃபர்னிச்சர்களைத் தவிர்க்கவும். குறிப்பாக எதற்கும் பயனில்லாத ஒன்று வீட்டில் எதற்கு? * ஒரு பொருளை எங்கே வைப்பது, அதை வைக்கப் போதுமான இடம் உள்ளதா என்பதை எல்லாம் தீர்மானிக்காமல் எதையும் அவசரப்பட்டு வாங்க வேண்டாம். * சிறிய அறையில் பெரிய சட்டமிட்ட ஓவியங்களையும், போட்டோக்களையும் மாட்டி வைக்காதீர்கள்.
சிறிய இடத்தில் பெரிய வாழ்க்கை வாழ்வது எப்படி..?
Comments
Post a Comment